நீட் விலக்கு மசோதா விவகாரம்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுவை தி.மு.க. கண்டனம்
நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுவை தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயகத்தை அழிக்க...
பல ஒன்றியங்களை ஒன்றிணைப்பது தான் இந்தியா. மேலும் இந்தியா பன்முக கலாசாரம் கொண்டது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் மாநில அரசு களின் அனைத்து கலாசாரங்களையும், ஜனநாயக உரிமை களையும் அழிக்கும் செயலில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றி அரசுப்பள்ளிகளில் படித்து வரும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மாணவர்களை காப்பாற்றும் நோக்கில் நீட் விலக்கு மசோதாவை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவேண்டியதுதான் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கவர்னர் களின் கடமை.
கவர்னருக்கு கண்டனம்
ஆனால் தமிழக கவர்னர் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற ஜனநாயக மக்கள் விரோத கருத்துகளையும், எண்ணங்களையும் கொண்டிருப்பவர்கள் கட்சி பணியாற்றலாமே தவிர மாண்புமிக்க பதவிகளில் இருக்கக்கூடாது.
இந்தநிலையில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது என்று தமிழக கவர்னரின் ஜனநாயக விரோத செயலுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார். இதை புதுவை மாநில தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
பிளவுகளை ஏற்படுத்தும்
கவர்னர் என்பவர்கள் ஜனநாயக விரோத செயல்கள் மாநிலங்களில் நடை பெறாமல் இருப்பதை பார்ப்பதற்குத்தானே தவிர அவர்களே ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு அல்ல. தனக்கு பதவி வழங்கிய மத்திய அரசுக்கு விசுவாசமாக இருப்பதால் ஜனநாயக விரோத செயல்களில் கவர்னர்கள் ஈடுபடுவது நல்லதல்ல. இந்த செயல்கள் மக்கள் மனதில் பிளவுகளை தான் ஏற்படுத்தும். நாட்டின் ஜனநாயகத்துக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.