ராமானுஜரின் சமத்துவ குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஐதராபாத்தில் ராமானுஜர் சிலை திறப்பதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராமானுஜரின் சிலை திறப்புக்கு நேரில் அழைப்பு விடுத்த த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமனுஜ ஜீயருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இராமானுஜரின் பொற்சிலைத்திறப்பு நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்காக எனது மரியாதை கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்த சீரிய தருணத்தில் இராமானுஜர் அவர்களின் சமத்துவ குரல் நாடெங்கும் சிறப்போடும் எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக நம் நாடு வளர்ச்சி பெறத்தற்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக திமுக தலைவராகவும் தன் வாழ்நாளெல்லாம் சமத்துவத்துக்காக பாடுபட்டவர் தலைவர் கலைஞர் என்று சுட்டுக்காட்டுவது எனது கடமையாகும்.
ராமானுஜரது வாழ்க்கையின் சாரத்தை எடுத்து சொல்லும் வகையில் அவர் ஒரு தொலைக்காட்சிதொடருக்கு கதை வசனம் எழுதினார். அவரது இலக்கிய - திரைப்படைப்புகளில் இதுவே இறுதியானதாகும்.
அதே நேரத்தில் எந்நாளும் உயிர்ப்புடன் இருந்து அடுத்து வரும் தலைமுறைகளிடம் குறிப்பாக நம் நாட்டின் இளைஞர் திரளிடம் இராமானுஜர் என்னும் மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதியின் வாழ்வையும் பணிகளையும் கொண்டு செல்லும் படைப்பாக அது அமைந்திருக்கிறது.
கலைஞர் அவர்களின் அடியொற்றித்தான் தமிழ்நாட்டில் திமுக அரசு தற்போது நடைபெற்று வருகிறது. என்பதனையும் நான் இத்தருணத்தில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இராமானுஜர் பரப்பிய சீர்த்திருத்தங்கள் எங்களது நெஞ்ச்சுக்கும் நெருக்கமானவை தாம். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக எனது அரசு நியமித்து தமிழ்நாட்டின் கோவில்களில் கருவறையில் பூசை செய்வதில் சமத்துவத்தை உறுதி செய்துள்ளது.
நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 8 மாதங்களில் மாநிலத்தில் கோவில்களின் நிர்வாகம் முறையாக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களின் சிறப்பாக நிர்வாகத்துக்குத்தேவையான நிதியினை ஒதுக்கியிருப்பதோடு கோவில் பூசாரிகளின் நலன்களையும் காத்து வருகிறோம்.
இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் தான் பக்தர்களும், அர்ச்சகர்களும் பயன்பெறும் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டிலேயே மிக சிறப்பான கோவில் நிர்வாகத்தினை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத்தமிழ்நாடு திகழ்கிறது.
தங்களது நிகழ்வு பெரும் வெற்றியடைய எனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் இராமனுஜரின் சமத்துவ சிலையானது என்ற இந்த அடையாளம் தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாகத்திகழ வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.