மழைநீர் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்றும் செலவை ஒப்பந்ததாரரிடம் வசூலிக்க வேண்டும்

மழைநீர் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அகற்றும் செலவை ஒப்பந்ததாரரிடம் வசூலிக்க வேண்டும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

Update: 2022-02-04 22:10 GMT
சென்னை,

சென்னையில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. தியாகராயநகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடிகால் மூலம் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றிய போதிலும், தண்ணீர் கால்வாயில் செல்லவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது தியாகராயநகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சி.ஐ.டி. நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் மாம்பலம் கால்வாய் வழியாக வெளியேறி வந்ததும், இந்த கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் கட்டிட கழிவுகளை கால்வாய் அருகே கொட்டி சென்றதால் அவை நீர் வழித்தடத்தை அடைத்துக்கொண்டதும் தெரியவந்தது. இதனால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிரச்சினையை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

விசாரணைக்கு பின்பு, கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பின்னர், வழக்கு விசாரணை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்