விடுதியில் தங்கி இருந்த வாலிபர் திடீர் சாவு
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் விடுதியில் தங்கி இருந்த வாலிபர் திடீரன இறந்தார்
வேலூர் மாவட்டம் திருநகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (வயது 26). இவரும் அதே பகுதியை சேர்ந்த வக்கீலுக்கு பயிற்சி பெற்று வரும் பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரியை சுற்றி பார்க்க ரமேஷ், தனது வருங்கால மனைவியுடன் வந்தார். இருவரும் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து புதுச்சேரியில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.
நேற்று முன்தினம் ஆரோவில் பகுதிக்கு சென்று விட்டு ரமேசும், அவரது காதலியும் விடுதிக்கு வந்து தங்கினர். நேற்று நள்ளிரவு திடீரென ரமேசுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. விடுதி ஊழியர்கள் உதவியோடு தனியார் ஆஸ்பத்திரியில் ரமேஷ் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று மீண்டும் விடுதிக்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ரமேஷ் திடீரென மயங்கினார். அதிர்ச்சி அடைந்த அவரது காதலி 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு ரமேசை கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.