இறந்த பெண்ணின் கையெழுத்தை போட்டு போலி ஆவணங்கள் மூலம் ரூ.5½ கோடி வீடு அபகரிப்பு

சென்னையில் இறந்த பெண்ணின் கையெழுத்தை போட்டு, போலி ஆவணங்கள் மூலம் ரூ.5½ கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்த புகாரில், கட்டிடக்கலை நிபுணர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-03 00:05 GMT
சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டை, சீதாம்மாள் காலனி, 3-வது குறுக்கு தெருவில் வசித்த மஞ்சுளா பட் என்பவர் தனது வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தார். ஆழ்வார்பேட்டை, செனடாப் சாலையில் வசித்த முகமது அக்மாலுதீன் (வயது 44) என்பவர் மஞ்சுளா பட் வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுளாபட் இறந்து விட்டதாக தெரிகிறது. வீட்டின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், இறந்து போன மஞ்சுளாபட்டின் கையெழுத்தை போட்டு, போலியான ஆவணம் தயாரித்து, மேற்படி வீட்டை அபகரித்து கொண்டதாக முகமது அக்மாலுதீன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

வழக்கு-கைது

இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

புகார் கூறப்பட்ட முகமது அக்மாலுதீன் கைது செய்யப்பட்டார். அவர் கட்டிட உள் அலங்கார கலை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அபகரித்ததாக புகார் கூறப்பட்ட வீடு ரூ.5½ கோடி மதிப்புடையது ஆகும்.

மேற்கண்ட இந்த தகவல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்