பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து

பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்து 5 வாகனங்களில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2022-02-02 21:25 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சிக்னலில் நேற்று இரவு வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோயம்பேடு நோக்கி கலவை ஏற்றி வந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதினார். இதில், சிக்னலில் நின்று கொண்டிருந்த கார், வேன், லோடு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. இதை கண்டதும் அங்கிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மயங்கியதால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

5 வாகனங்கள் சேதம்

மேலும் இந்த விபத்தில் குமரேசன், ஜெயக்குமார் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில், லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சுய நினைவினை இழந்து சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதியது தெரியவந்தது. இந்த விபத்தில் 5 வாகனங்கள் சேதமடைந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் உதவியுடன் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் சம்பவத்தன்று போக்குவரத்து சிக்னல் முறையாக இயங்காததும் இந்த விபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. லாரி மெதுவாக வந்து சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்