வார்டு கவுன்சிலர் பதவி ரூ.24 லட்சம் ஏலம் விவகாரம்: பேரூராட்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளிவந்த விவகாரத்தில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-02-02 21:22 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட தண்டுமாரியம்மன் குப்பம், ஊத்துக்காட்டம்மன் குப்பம் பகுதிகள் சேர்ந்து 14-வது வார்டாக உள்ளது. இங்கு தண்டுமாரியம்மன் குப்பத்தில் 700 ஓட்டுகளும், ஊத்துக்காட்டம்மன் குப்பத்தில் 500 ஓட்டுகளும் உள்ளது. தண்டுமாரியம்மன் குப்பத்தை சேர்ந்தவர்கள் பேரூராட்சி கவுன்சிலர் பதவியை ரூ. 24 லட்சத்துக்கு ஏலம் விட்டதாக கூறி ஊத்துக்காட்டம்மன் பகுதியை சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தேர்தலை புறக்கணித்து விட்டு வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு போன்றவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்துவிட போவதாகவும் எச்சரித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் நேற்று மதுராந்தகம் ஆர்.டி.ஓ சரஸ்வதி தலைமையில், தாசில்தார் வெங்கட்ரமணன், இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தா ஜெயலட்சுமி, சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு தண்டுமாரியம்மன் குப்பம் ஊத்துக்காட்டு குப்பம் பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பேரூராட்சி கவுன்சிலர் பதவியை ஏலம் விடவில்லை என்றும் பலர் போட்டியிடபோவதாகவும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் தண்டுமாரியம்மன் குப்பத்தை சேர்ந்த சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்