விஷமருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி பலி

எலி தொல்லையை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட விஷமருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி பலி.

Update: 2022-02-02 19:58 GMT
கோவை,

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து (வயது 55). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கிரேஷி அம்மா (52). இவர்களுக்கு எனிமா ஜாக்குலின் (19), பிராங்குலின் (16) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இதில் எனிமா ஜாக்குலின் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கிரேஷி அம்மா, செங்குட்டைபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு பின்புறம் அவர்களின் வீடு உள்ளது.

வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் அதனை கட்டுப்படுத்த கேரட்டில் விஷமருந்து தடவி கிரேஷி அம்மா வைத்துள்ளார். இது தெரியாமல் அந்த கேரட்டை எனிமா ஜாக்குலின் சாப்பிட்டு விட்டார்.

உடனே அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி எனிமா ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்