அமைச்சரின் தம்பி கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல்

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-02-02 18:57 GMT
சென்னை,

இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த கொலை வழக்கை தமிழக போலீசாரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்தின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த விசாரணையில் குறைபாடு இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை மீண்டும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகளின் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கலாம். அதில் தமிழக அதிகாரிகளையும் இடம் பெறச் செய்யலாம் என்று கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புலன் விசாரணைக்கு தமிழக போலீசார் உதவ தயாராக உள்ளனர் என்றார்.

அதையடுத்து சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு உதவும் தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை விரைவில் தாக்கல் செய்வதாக மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்