லாவண்யாவிற்கு நடந்ததை போல் மற்ற மாணவர்களுக்கு நடக்கக்கூடாது விஜயசாந்தி பேட்டி

மதமாற்ற தடை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். லாவண்யாவிற்கு நடந்ததை போல் மற்ற மாணவர்களுக்கு நடக்கக்கூடாது என தஞ்சையில், விஜயசாந்தி கூறினார்.

Update: 2022-02-01 19:56 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி லாவண்யா (வயது 17) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதம்மாற கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறி பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்தினர்.

பா.ஜ.க. குழு

இந்த நிலையில் மதமாற்றம் தொடர்பான புகார் குறித்து விசாரிக்க மத்தியபிரதேச மாநில பா.ஜ.க துணைத் தலைவர் சத்யா ரே எம்.பி., பா.ஜ.க. மாநில மகளிர் அணி முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி, மராட்டிய மாநில பா.ஜ.க. துணைத்தலைவரும், மகளிர் உரிமை போராளியுமான சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகளிர் அணி தலைவி கீதா விவேகானந்தா ஆகிய 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா அமைத்தார்.

இந்த குழுவினர் நேற்று மாலை தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பேட்டி

பின்னர் வெளியே வந்த விஜயசாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவி லாவண்யாவிற்கு நடந்தது போல், மற்ற மாணவிகளுக்கு நடக்க கூடாது. அது மிகவும் கஷ்டமாக இருக்கும். மதமாற்ற சட்டத்தை இன்னும் வலுப்படுத்தி மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மதமாற்றம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.

நியாயம் கிடைக்கும்

கண்டிப்பாக மாணவி குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று கலெக்டர் சொல்லி இருக்கிறார். மாணவியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளோம். கலெக்டரிடம் விளக்கம் அளித்துள்ளோம். முழுமையாக விசாரித்து, ஜே.பி.நட்டாவிடம் விரைவில் அறிக்கை அளிப்போம்.

தமிழக அரசு மாணவி லாவண்யா விவகாரத்தில் ஏன் மவுனமாக உள்ளது? என தெரியவில்லை. தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. இதுவரை மாணவியின் குடும்பத்திற்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் செய்யவில்லை

மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். பா.ஜ.க. இதில் அரசியல் செய்யவில்லை. அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

இது போன்ற விஷயம் மற்ற மாணவிகளுக்கு நடக்காமல் இருக்க முதல்-அமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்