தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது தடுக்க முயன்றதால் போலீசாருடன் மோதல்
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதை தடுக்க முயன்றதால் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதை தடுக்க முயன்றதால் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
நாடு முழுவதும் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது. அதன் ஒரு அம்சமாக புதுவை மாநிலமாக்க மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சியின் போது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்காக மத்திய அரசு பணிகளை மேற்கொண்டது. இதையடுத்து அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மின்துறை ஊழியர்களும் போராட்டக்குழு அமைத்து மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
ஆனால் மின்துறை ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் காலவரையற்ற போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சாதாரண மின் பழுதுகளை சரிபார்ப்பது உள்பட எந்த பணிகளையும் செய்யமாட்டோம் என்று அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் போராட்டங்களில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை தலைவர் எச்சரித்து இருந்தார். ஆனால் இதையும் மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று மின்துறை ஊழியர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
போலீசாருடன் மோதல்
இந்தநிலையில் மின்துறை அலுவலக வளாகங்களில் ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க கலெக்டர் வல்லவன் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால் மின்துறை ஊழியர்களின் போராட்டம் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. பணிகளை புறக்கணித்த ஊழியர்கள் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் அவர்களை சோனாம்பாளையம் சந்திப்பில் தடுப்புக் கட்டைகளை அமைத்து போலீசார் தடுத்தனர். கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, வடக்கு போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
மின்துறை அலுவலகத்துக்கு செல்ல முயன்ற ஊழியர்களை போலீசார் தடுத்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மின்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பணிகள் பாதிப்பு
பிற அலுவலகங்களில் பணியாற்றும் மின்துறை ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் சோனாம்பாளையம் சந்திப்பில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மின்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின்கட்டண வசூல், ரீடிங் எடுப்பது, புதிய இணைப்புகள் வழங்குவது, மின் விளக்குகள் பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. மின்கட்டண வசூல் மையங்கள் மூடியே கிடந்தன.
இதையொட்டி அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க மின்துறை அலுவலகங்கள், துணை மின் நிலைய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காரைக்கால்
காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதற்காக காரைக்கால் தலைமை மின்துறை அலுவலக வாயில் முன் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.