15 முதல் 18 வயது மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயம், அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள், அனைத்து மாநகராட்சி, சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகள், பள்ளி வாகனங்களை தினசரி கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் உணவு உண்ணும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் நோய் தொற்று பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.