நெஞ்சை பதை பதைக்க வைத்த சம்பவம்: ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை

பட்டப்பகலில் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வகையில் ஓட, ஓட விரட்டி கூலித்தொழிலாளி வெட்டிக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-31 21:11 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மலையப்பன்பட்டியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 31). கூலித்தொழிலாளி. இவர், வசித்த தெருவில் தக்காளி வியாபாரி மருது பால் சாகிப் (34) என்பவரும் வசித்து வருகிறார். மருது பால் சாகிப்புக்கு, சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

இவர் திருமணம் செய்த பெண் வீட்டாரிடம் மருது பால் சாகிப் நல்லவர் இல்லை என்றும், அவருக்கு பெண் கொடுக்க வேண்டாம் என்றும் சாமிதுரை ஏற்கனவே கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் தற்போதுதான் மருது பால் சாகிபுக்கு தெரியவந்தது.

இதன்காரணமாக சாமிதுரை குடும்பத்துக்கும், மருது பால் சாகிப் குடும்பத்துக்கும் இடையே கடந்த 3 நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இருதரப்பினரும் வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

கடைக்குள் புகுந்து தாக்குதல்

இந்த நிலையில் சாமிதுரை நேற்று மதியம் வத்தலக்குண்டு-மதுரை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பேக்கரி கடைக்கு சென்றார்.

அப்போது திடீரென மருது பால் சாகிப் மற்றும் அவருடைய நண்பர் உதயகுமார் (22) ஆகியோர் அந்த பேக்கரி கடைக்குள் திடீரென புகுந்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும் சேர்ந்து சாமிதுரையை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர்.

ஓட, ஓட விரட்டிவெட்டிக்கொலை

இதனை சற்றும் எதிர்பாராத சாமிதுரை உயிர் தப்பிக்க பேக்கரியில் இருந்து வெளியே ஓடினார். அவரை ஓட, ஓட விரட்டி மருது பால் சாகிபும், உதயகுமாரும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

பட்டப்பகலில் நெஞ்சை பதை பதைக்க செய்யும் வகையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக மருது பால் சாகிப், உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வைரலாகும் வீடியோ

கொலை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சாமிதுரையை 2 பேரும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.

தற்போது அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்