புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி
புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கட்டுப்பாடுகள்
உருமாறிய கொரேனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் ஒமைக்ரான் புகுந்துள்ளதால் தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை விதித்தது.
இந்தநிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி புத்தாண்டு கொண்டாட தடை செய்ய கோரி வழக்கு தொடரடப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டும் திரை பிரபலங்களுக்கு தடை, மதுக்கடைகளை திறக்க நேர கட்டுப்பாடு போன்ற நிபந்தனைகளை வலியுறுத்தி உள்ளது.
கடற்கரை சீல் வைப்பு
இதற்கிடையே புத்தாண்ட கொண்டாட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து குவிந்தனர். இதையொட்டி புதுவை எல்லைகளில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பரிசோதித்த பிறகே அவர்களை அனுமதித்தனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு அந்த இடத்திலேயே தடுப்பூசி போட சுகாதார துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வாகன நெரிசலை சமாளிக்க புதுவையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி கடற்கரை சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒயிட் டவுனில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆம்பூர் சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது. கடற்கரை சாலையை யொட்டி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சென்று வருவதற்காக சிவப்புநிற வாகன பாஸ் வழங்கப்பட்டு இருந்தது.
வாகன நெரிசல்
ஏற்கனவே வந்து குவிந்த நிலையில் நேற்றும் சுற்றுலா பயணிகள் கார்களில் வந்தனர். இதனால் நகரின் நுழைவு பகுதியான கோரிமேடு இந்திராகாந்தி சிலை, புஸ்சி வீதி, அண்ணா சாலை, நேரு வீதி, உப்பளம், கடற்கரை செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. மழை பெய்து தண்ணீர் தேங்கியதாலும் போக்குவரத்தில் வாகனங்கள் சிக்கி திக்குமுக்காடின.
வாகனங்களை நிறுத்துவதற்கு ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கடற்கரை சாலையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதுதவிர 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும், ஆள் இல்லா விமானங்கள் மூலமாகவும் போலீசார் கண்காணித்தனர். நகை, பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியபடி இருந்தனர்.
மின்விளக்கு அலங்காரம்
பல ஓட்டல்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடற்கரை சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் ஆன தோரணங்கள் கட்டப்பட்டு இரவில் ஜொலித்தன. ஓட்டல்கள் மற்றும் முக்கிய அரசு கட்டிடங்களிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது.
நேற்று இரவு புதுவை கடற்கரையில் வெளியூர் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அதிகளவில் திரண்டனர். நள்ளிரவு 11 மணியளவில் காந்தி சிலை அருகே மக்கள் கூட்டம் அலை மோதியதால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.