மாமியாரை கொன்றுவிட்டு தீவிபத்தில் இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது

திருச்சியில் மாமியாரை குத்தி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர். கியாஸ் கசிந்து தீ விபத்தில் அவர் இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

Update: 2021-12-31 16:14 GMT
திருச்சி,

திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் 8-வது குறுக்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் இப்ராம்கான். இவருடைய மனைவி நவீன்(வயது 46). இவருடைய மகன் ஆசிம்கான்(28). இவர் விருதாசலத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் கல்லூரியில் படித்தபோது, ரேஷ்மா(26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2½ வயதில் மகன் உள்ளான். ஆசிம்கானைவிட ரேஷ்மா குடும்பத்தினர் சற்று வசதி குறைவானவர்கள். ஆசிம்கான் தனது மனைவி ரேஷ்மாவை விஸ்வாஸ்நகரில் தங்க வைத்துவிட்டு அடிக்கடி விருதாசலம் சென்று அரிசி ஆலையை கவனித்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் மாமியார் நவீனுக்கு தனது மகன் ஆசிம்கான் ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக மாமியார் நவீன், மருமகள் ரேஷ்மாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் ரேஷ்மா மனக்குமுறலில் தவித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆசிம்கான் ஒரு நிகழ்ச்சிகாக வெளியே சென்றுள்ளார். வீட்டில் நவீன் மீன் சமைத்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது. உடனே தன்னை தூக்கிவிடும்படி ரேஷ்மாவிடம் நவீன் கூறிஉள்ளார். ஆனால் மாமியார் நவீன் மீது ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை எழுந்திருக்க விடாமல் அருகே இருந்த சிறிய கத்தியால் சரமாரியாக அவரை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து நவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே ரேஷ்மா மாமியார் நவீனின் உடையில் தீ வைத்து அவரது உடலை எரித்தார்.

சிறிதுநேரத்தில் நிகழ்ச்சிக்கு சென்று இருந்த ஆசிம்கான் வீடு திரும்பியுள்ளார். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு நவீன் உடல் கருகி இறந்ததாக கூறி ரேஷ்மா கண்ணீர்விட்டு அழுது நாடகமாடியுள்ளார். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விபத்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் நவீனின் உடலில் 14 இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காந்திமார்க்கெட் போலீசார் மருமகள் ரேஷ்மாவை பிடித்து துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் தான் மாமியார் நவீனை கொலை செய்தார் என்பதும், இது வெளியே தெரியாமல் இருக்க கியாஸ் கசிந்து அவர் தீ விபத்தில் இறந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார் ரேஷ்மாவை கைது செய்தனர்.

மாமியாரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரேஷ்மா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் எனது கணவர் ஆசிம்கானுடன் சேர்ந்து வாழ்ந்தது மாமியார் நவீனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தினமும் என்னை சித்ரவதை செய்து வந்தார். ஏற்கனவே 2 முறை கருக்கலைப்பு செய்தநிலையில், 3-வது முறையாக ஒரு பிள்ளையை பெற்று எடுக்க மிகவும் சிரமப்பட்டேன். 

சம்பவம் நடந்த அன்று சமையல் அறையில் இருந்த எனது மாமியார் நவீன் திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் என்னிடம் தூக்கிவிடும்படி கேட்டார். ஆனால் அவர் மீது இருந்த ஆத்திரத்தில் நான் அவரிடம் அப்படியே இறந்துவிடுங்கள் என்று கூறினேன். இதை கேட்டு அவர் சத்தம் போட்டார். உடனே நான் அருகே இருந்த சிறிய கத்தியை எடுத்து அவரை பலமுறை குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை எரித்தேன். பின்னர் கியாஸ் கசிந்து தீ விபத்தில் அவர் இறந்ததாக நாடகமாடினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்