கொட்டித் தீர்த்த மழை: நள்ளிரவில் திடீரென ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து,ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2021-12-31 03:06 GMT
சென்னை,

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால், நேற்று மாலை முதல் அண்ணா சாலை, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரமாக மக்கள் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே இன்றும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும். பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்