புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகை சன்னிலியோன் பங்கேற்க தடையா

ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகை சன்னிலியோன் பங்கேற்க தடை விதிக்கப்படுமா? என்பதற்கு அரசு தரப்பில் அலட்சியமாக பதில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2021-12-30 19:13 GMT
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகை சன்னிலியோன் பங்கேற்க தடை விதிக்கப்படுமா? என்பதற்கு அரசு தரப்பில் அலட்சியமாக பதில் தெரிவிக்கப்பட்டது.
உருமாறிய கொரோனா
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் பரவி இந்தியாவிலும் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தநிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுவை மாநிலத்தில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதித்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு குவிந்து வருகிறார்கள்.
இதற்கிடையே பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதற்கிடையே கொரோனா பரவலை காரணம் காட்டி புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
திரை பிரபலங்கள் கூடாது
இதனை விசாரித்த ஐகோர்ட்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தில் திரைபிரபலங்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானங்கள் விற்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் இதையும் மீறி புதுவை பழைய துறைமுகத்தில் புகழ்பெற்ற பிரபல இசைக்குழுவினரின் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பிரபல இந்தி நடிகை சன்னிலியோன் பங்கேற்பதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்துள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் நடிகை சன்னிலியோன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அவரது நிகழ்ச்சிக்காக டிக்கெட் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கவலை
தற்போது புதுவை மாநிலத்திலும் ஒமைக்ரான் தொற்று பரவி கல்லூரி மாணவி, முதியவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுபோன்ற கொண்டாடங்களை நடத்துவதால் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டு தொற்று பரவ ஏதுவாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் தீவிரம்காட்டி வருகிறார்கள். 
ஐகோர்ட்டு திரை பிரபலங்கள் பங்கேற்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள போதிலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடர்வது குறித்து உதவி கலெக்டர் ஒருவரிடம் கேட்டபோது, ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நகல் எதுவும் ஆவணமாக எங்களுக்கு கிடைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் எழுத்துபூர்வமான விவரங்களை தெரிந்தபிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்று அலட்சியமாக பதில் தெரிவித்தார்.
அதிகாரிகள் அலட்சியம்
ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது புதுவையில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிப்பதில் தீவிரம் காட்டாமல் அரசு அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்து வந்தனர். அப்போதும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் புதுச்சேரியை ஆக்கிரமிக்கும் வகையில் வந்து சென்றனர். தற்போது கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகை பங்கேற்பது குறித்து அரசு அதிகாரிகள் அலட்சியமாகவே பதில் தெரிவித்து இருப்பது சமூக ஆர்வலர்களை விரக்தி அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்