தடுப்பணை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய தமிழக போலீசார்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வெள்ளத்தில் சேதமடைந்த கொம்மன்தான்மேடு தடுப்பணை சீரமைக்கும் பணியை தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-30 19:04 GMT
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வெள்ளத்தில் சேதமடைந்த கொம்மன்தான்மேடு தடுப்பணை சீரமைக்கும் பணியை தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொமந்தான்மேடு தடுப்பணை
பாகூரை அடுத்த கொம்மந்தான்மேட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் உள்ளது. இதன் பெரும்பாலான பகுதி கடலூர் மாவட்டத்தில் வருகிறது. 
இந்த நிலையில் சமீபத்தில் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் தடுப்பணை உடைந்து சேதமடைந்தது. இதனை சீரமைக்கும் பணியை புதுச்சேரி பொதுப் பணித்துறையினர்    கடந்த 26-ந் தேதி தொடங்கினர். இதற்காக பொக்லைன், டிராக்டர்கள் மூலம் மண், கற்கள் கொட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம்     தடுப்பணை பகுதிக்கு சென்ற கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீசார், அங்கு பணி செய்துகொண்டிருந்த தொழிலாளர்களிடம், என்ன வேலை நடக்கிறது, பணிக்கான ஆணையை காண்பிக்குமாறு கேட்டனர். அப்போது முறையான ஆவணம் இல்லை என்று கூறப்படுகிறது.
வாகனங்கள் பறிமுதல்
இதையடுத்து கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதிபெற்று பணியை தொடங்குங்கள் என்று கூறிவிட்டு, அங்கு நின்ற டிராக்டர் உள்ளிட்ட கட்டுமான வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்துச்சென்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால்    தடுப்பணை சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதை அறிந்த பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், புதுச்சேரி - தமிழக மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம்   பேச்சுவார்த்தை   நடத்தினார். அதன்பேரில் பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்