பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-30 18:55 GMT
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக 100 வவுச்சர் ஊழியர்கள்
புதுவை அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி    பொதுப்பணித்  துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில்   புதிதாக 100-க்கும் மேற்பட்டவர்கள் வவுச்சர் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாவும் அவர்களையும் இவர்களுடன் சேர்த்து சீனியாரிட்டி பட்டியல்   தயார்  செய்யப் படுவதாகவும் கூறப்படுகிறது. புதிய ஊழியர்களையும் தங்களுடன் சேர்த்து சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படுவதால் தங்களது பணிநிரந்தரம் தொடர்பான விவகாரங்கள் தடைபடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
முற்றுகை போராட்டம்
எனவே தங்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கக்கோரியும், சீனியாரிட்டி பட்டியலில் தங்களுக்கு முதலிடம் அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி அரசு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் சரவணன் தலைமையில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சங்க நிர்வாகிகள் சிலர் தலைமை செயலாளரை சந்தித்து தங்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி முறையான சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்