தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2021-12-30 14:06 GMT
சென்னை,

சென்னையில் இன்று மதியம் முதல் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தீடீர் கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பட்டினபாக்கத்தில் 13 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ. மழையும், எம்.ஆர்.சி. நகரில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் மழைப்பொழிவு சற்று குறைந்திருந்த நிலையில், இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மேலும் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 4 மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் நாளையும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு 209 செ.மீ. மழை பதிவாகி இருந்த நிலையில், இன்று பெய்த மழையையும் சேர்த்து இந்த ஆண்டு மொத்தம் 217 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழைதான் அதிகபட்சமாக பதிவாகி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்