சென்னையில் கனமழை: சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நண்பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கள், மயிலாப்பூர், மீனம்பாக்கம், நந்தனம், அசோக் நகர், பாரிமுனை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.