ஒமைக்ரான் பாதிப்பு; தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு குறைவு: தமிழக அரசு தகவல்

சென்னையில் 3 இடங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன என சுகாதார துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-12-30 05:49 GMT

சென்னை,


இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.  இவற்றில், டெல்லி 263, மராட்டியம் 252, குஜராத் 97 ஆகியவை அதிக ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன.  இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் 69, கேரளா 65, தெலுங்கானா 62 ஆகியவை உள்ளன.

இந்த வரிசையில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.  இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசும்போது, தமிழகத்தில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அவர் கூறியுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்புகள் குறைவு என்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவர்கள் குறுகிய காலத்தில் நலம் பெறுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்