அறநிலையத்துறை அமைக்கவுள்ள புதிய கல்லூரி கட்டிட வரைபடங்களில் மாற்றம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

அறநிலையத்துறை அமைக்கவுள்ள புதிய கல்லூரி கட்டிட வரைபடங்களில் மாற்றம் அமைச்சர் சேகர்பாபு தகவல்.

Update: 2021-12-29 19:47 GMT
சென்னை,

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் கல்விக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கி பேசும்போது, ‘முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், குறைவான கட்டணத்தில் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைந்து கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் 35 பள்ளிகள், 9 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக இந்தாண்டு தொடங்கப்பட்ட 4 கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த கல்வியாண்டில் 6 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி பல்வேறு கருத்துகள் ஆலோசிக்கப்பட்டது. கல்விக்குழுவினரிடம் புதிய கல்லூரி கட்டிட வரைபடங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் சில மாற்றங்கள் செய்ய கல்வியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்டு முதல்-அமைச்சரின் ஒப்புதலுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், ஆர்.எம்.கே. கல்விக்குழு நிறுவனத்தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி தலைவர் கருமுத்து தி.கண்ணன் உள்ளிட்ட கல்வியாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்