ஒரு மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய 2 பேர்
புதுவை அருகே ஒரு பசு மாட்டுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விவகாரம் போலீஸ் விசாரணைக்கு வந்தது.
புதுவை அருகே ஒரு பசு மாட்டுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விவகாரம் போலீஸ் விசாரணைக்கு வந்தது.
சாலையில் கன்று ஈன்றது
புதுவையை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் சாலையோரம் பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. இதை பார்த்த திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அசோக் (வயது 45) அந்த பசுவையும், கன்றையும் வீ்ட்டிற்கு கொண்டு சென்று பராமரித்து வந்தார்.
இதற்கிடையே மொரட்டாண்டியை சேர்ந்த விக்கி (40) என்பவர், தான் வளர்த்த பசுமாட்டை காணவில்லை என்று அக்கம்பக்கம் தேடிப்பார்த்தார். அப்போது அசோக் வீட்டில் தனது பசுமாடு இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று, தன்னுடைய பசுமாட்டை ஏன் இங்கு கட்டி வைத்துள்ளீர்கள் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
யாருக்கு உரிமை?
அதற்கு அசோக், பல நாட்கள் சாலையில் இருந்த பசுவுக்கு உணவு வழங்கி பராமரித்து வந்தேன். அதனால் அதனை வீட்டுக்கு அழைத்து வந்தேன் என்றார். இதையடுத்து அசோக் வீட்டில் இருந்த கன்றை விக்கி தூக்கிச் சென்றார். இது குறித்து அசோக் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விக்கியை அழைத்து போலீசார் விசாரித்தபோது, தனது பசுவை அசோக் ஓட்டிக்கொண்டு விட்டதாக கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் பசுவையும், கன்றையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில் பசுவும், கன்றும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அதனை போலீசார் கட்டிவைத்து வைக்கோல், கீரை உள்ளிட்டவற்றை போட்டு பராமரித்து வந்தனர்.
கோ சாலையில் ஒப்படைப்பு
சாலையில் கன்று ஈன்ற பசு யாருக்கு சொந்தமானது என்ற இந்த வினோதமான இந்த விவகாரத்தில் எப்படி தீர்ப்பு கூறுவது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். அசோக், விக்கி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து பசுவையும், கன்றையும் பஞ்சவடியில் உள்ள கோ சாலையில் போலீசார் ஒப்படைத்தனர்.