புதுவை மாநில எல்லைப்புற கிராமங்களில் சொத்து விவரங்கள் தயாரிக்க டிரோன் மூலம் சர்வே எடுக்கும் பணி

புதுவை மாநில எல்லைப்புற கிராமங்களில் சொத்து விவரங்கள் தயாரிக்க டிரோன் மூலம் சர்வே எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுளளது.

Update: 2021-12-29 16:34 GMT
புதுச்சேரி
புதுவை மாநில எல்லைப்புற கிராமங்களில் சொத்து விவரங்கள் தயாரிக்க டிரோன் மூலம் சர்வே எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுளளது.

சொத்து அட்டை

மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஸ்வமித்வா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கிராமப்புறங்களில் வீடுகள், சொத்துகள் வைத்திருப்பவர்களுக்கு அதற்கான அடையாள அட்டை வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.    அந்த அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துகள், வீடுகள் குறித்த விவரங்கள் உரிமையாளரின் படத்துடன் இடம்பெற்று இருக்கும்.
அதன்படி ஆளில்லா குட்டி விமானங்களை (டிரோன்) பயன்படுத்தி அனைத்து கிராமப்புற சொத்துகளையும் ஆய்வு செய்து வரைபடங்கள் தயாரித்து அதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இந்த பணிகள் புதுவை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் கடந்த 10-ந்தேதி தொடங்கப்பட்டது.

வங்கிக்கடன்

தற்போது கிராமப்புறங்களில் அளவீடு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. நேற்று செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களில் டிரோன் மூலம் நவீன கேமராக்களை கொண்டு அளவீடு செய்யும் பணி நடந்தது. இந்த பணிகளை துணை கலெக்டர் ரிஷிதா குப்தா, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ், தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இவ்வாறு அளவீடு செய்யும் விவரங்களை கொண்டு சொத்து அட்டைகள் தயார் செய்யப்படும். அதனைக்கொண்டு வங்கிகளில் கடனுதவி பெறலாம். அதுமட்டுமின்றி சொத்துகள் குறித்த விவரங்களை கொம்யூன் பஞ்சாயத்துகள் மேம்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக சொத்து வரி விதிப்புகளை எளிதாக செய்ய முடியும். அதுமட்டுமின்றி வளர்ச்சி பணிகளை திட்டமிடவும் இந்த அளவீடு உதவியாக இருக்கும்.

67 வருவாய் கிராமங்கள்

இந்த அளவீடு பணியானது கிராமப்புறங்களில் மட்டுமே நடைபெற உள்ளது. அதாவது புதுவை பிராந்தியத்தில் 67 வருவாய்    கிராமங்களை உள்ளடக்கிய 235 சதுர கிலோமீட்டர்  பகுதியில்  நடத்தப் படுகிறது. மேலும் காரைக்காலில்  32  வருவாய்  கிராமங்களை உள்ளடக்கிய 157 சதுர கிலோமீட்டரில் நடைபெற உள்ளது.
இந்த அளவீடு செய்யும் பணியை மத்திய அரசின் சர்வே ஆப் இந்தியா அமைப்பினர் செய்கின்றனர். வருவாய்த்துறையிடம் ஏற்கனவே உள்ள விவரங்கள் மற்றும் அளவீடு செய்யும் விவரங்களை கொண்டு புதிய சொத்து அட்டை தயார் செய்யப்படும். 
அதில் மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம், அளவீடு செய்யப்பட்ட ஆண்டு, ஒருங்கிணைந்த அடையாள எண், சொத்து விவரம், பரப்பளவு, எல்லைகள், சொத்தின் உரிமையாளர் படம், பங்குதாரர் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த அளவீடு குறித்து நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:-

எல்லை கற்கள்

சொத்து அடையாள அட்டை வழங்கும் பணியானது தற்போது எல்லைப்புற கிராமங்களில் தொடங்கியுள்ளது. எல்லைப்பகுதிகளில் கடந்த 1970-ம் ஆண்டு சர்வே நடத்தப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அதற்கான எல்லை கற்கள் 6 அடி ஆழத்துக்கு குழிகள் தோண்டி புதைத்து வைக்கப்பட்டுள்ளன.
அவைகளை தேடி கண்டு பிடித்து தற்போது அளவீடு செய்யும்  பணிகளை  நடத்து கிறோம்.  அந்த  கற்களுக்கு தற்போது வெள்ளை நிற வர்ணம் பூசுகிறோம். சொத்து அடையாள அட்டைகளில் சொத்து, உரிமையாளர்கள் குறித்த முழு விவரம் இடம்பெற்றிருக்கும். இந்த அட்டைகள் இருந்தால் வங்கிகளில் கடன் வாங்கும்போது சரிபார்ப்பு என்பதே இருக்காது.
துல்லியமான விவரங்கள்
அரசுக்கும்  துல்லியமான விவரங்கள்  கிடைக்கும். அதைக்கொண்டு வரைபடங்களும் (எப்.எம்.பி.) துல்லியமாக தயாரிக்கப்படும். இதைக்கொண்டு கொம்யூன் பஞ்சாயத்துகள் சொத்து குறித்த முழுமையான விவரங்களை பெறலாம்.
புதுவையில் அளவை முடித்து காரைக்காலில் அளவீடு செய்யப்படும். இதற்கான முழு செலவினையும் மத்திய அரசு ஏற்கிறது. இந்த டிரோன் மூலம் 17 மீட்டர் அளவுக்கு ஒரே நேரத்தில் அளவீடு செய்ய முடியும். மண்ணாடிப்பட்டு பகுதியில் முடிந்ததும் பாகூர், வில்லியனூர் பகுதிகளில் நடைபெறும்.

மார்ச் மாதத்துக்குள்...

வருகிற மார்ச் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க மத்திய அரசு  அறிவுறுத்தி உள்ளது. அதற்கு ஏற்ப பணிகள்   முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு  துறை  இயக்குனர் ரமேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்