பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு வருகிற 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஒரு கும்பல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தனர்.
இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்றது.
இதற்காக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் சேலம் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி இந்த வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் சாட்சி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி கூறி உள்ளார்.