நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 3 பெண்கள் படுகாயம்
திருபுவனை அருகே நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
திருபுவனை
திருபுவனை அருகே நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
கரும்பு தோட்டம்
திருபுவனை அருகே உள்ள பி.எஸ்.பாளையம் ஏரிக்கரை அருகே சுப்பிரமணி என்பவரின் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று பெண் தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தில் உருண்டையாக கிடந்த 3 மர்மபொருட்களை மண்வெட்டியால் வெட்டியுள்ளனர்.
அவை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த கற்பகம் (வயது 55), சரளா (42), சியாமளா (55) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் புதுச்சேரியில் இருந்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கரும்பு தோட்டத்தில் தடயங்களை சேகரித்தனர்.
நாட்டு வெடிகுண்டு
கரும்பு தோட்டத்தின் அருகே மணிலா, மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை தின்பதற்காக அங்கு காட்டுப்பன்றிகள் படையெடுத்துள்ளன. எனவே காட்டுப்பன்றிகளுக்காக நாட்டு வெடிகுண்டுகளை பழத்தில் உருண்டையாக பிடித்து கரும்பு தோட்டத்தில் வைத்துள்ளனர். அது தெரியாமல் பெண்கள் மண் வெட்டியால் வெட்டியதால் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.