கோழிப்பண்ணையில் கோர தீ விபத்து - 4 ஆயிரம் கோழிகள் கருகின
இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரகிள்ளையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவரது கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்த சுமார் 4 ஆயிரம் கோழிகள் தீயில் பரிதாபமாக கருகின.
இது குறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரித்து வருகின்றனர்.