போலி வேலைவாய்ப்பு மோசடி: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

போலி வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-12-27 23:11 GMT
சென்னை,

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கொரோனா பாதிப்பு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, ஒமைக்ரான் குறித்த அச்சம் என பல இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி இருக்கிற சூழ்நிலையில் போலி வேலைவாய்ப்பு இப்போது புதிதாக உருவெடுத்து உள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் வேலைவாய்ப்பு என்று கூறி கிராமப்புற இளைஞர்களை குறி வைத்து மோசடி பேர்வழிகள் ஈடுபட்டுள்ளதை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதாக வந்துள்ள செய்தி பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது.

போலீசில் புகார்

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் லட்சினை பயன்படுத்தப்படுவதும், விண்ணப்பதாரர்களின் வங்கி விவரங்கள் சேகரிக்கப்படுவதும், இதுவரை 18 பேர் பணியமர்த்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடி பேர்வழிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களின் பணம் அவர்களிடமே திருப்பி அளிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுபோன்ற மோசடி பணியமர்த்தம் தமிழ்நாட்டில் வேறு எங்காவது நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தீவிர நடவடிக்கை

எனவே முதல்-அமைச்சர், இதில் தக்க கவனம் செலுத்தி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இதனை தீர விசாரித்து, மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குரிய பணம் அவர்களுக்கு கிடைக்கவும், இதுபோன்ற புகார்கள் இனி வராத வண்ணம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்