செல்லிப்பட்டு படுகை அணை மீண்டும் உடைந்தது
செல்லிப்பட்டு படுகை அணை மீண்டும் உடைந்தது. மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டன.
திருக்கனூர்
செல்லிப்பட்டு படுகை அணை மீண்டும் உடைந்தது. மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டன.
படுகை அணை
திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. 115 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அணையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.
படுகை அணையை பராமரித்து வரும் புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளின், சேதத்தை உடனடியாக சரிசெய்யவில்லை. இதனால் அணையின் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு தண்ணீர் கசிந்தது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
அதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அப்போது தற்காலிகமாக அதிகாரிகள் மணல் மூட்டைகளை மட்டும் வைத்து சீரமைத்தனர். எனினும் அணை முழுமையாக சரி செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்கனவே சேதமடைந்து இருந்த அணையின் நடுப்பகுதியில் கற்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அணை எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதை தாக்கு பிடிக்க முடியாமல் கடந்த மாதம் 20-ம் தேதி அணையின் நடுப்பகுதி முழுவதுமாக உடைந்து, சின்னா பின்னமானது. அணையில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி வீணாக சென்று கடலில் கலந்தது.
மீண்டும் உடைந்தது
இதையடுத்து ஆற்றில் வந்த தண்ணீரை சேமிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தினர். அந்த மணல் மூட்டைகள் தற்போது சேதமடைந்து மீண்டும் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொஞ்சநஞ்சம் இருந்த தண்ணீரும் மீண்டும் கடலில் வீணாக கலந்து வருகிறது.
மீண்டும் மீண்டும் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக அணை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிரந்தர தீர்வாக புதிய அணை கட்டவேண்டும் எனவும், அதற்கான பணிகளை உடனே தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.