ஒமைக்ரானை கட்டுப்படுத்த நடவடிக்கை: தமிழகத்தில் மத்திய நிபுணர் குழு 5 நாட்கள் தொடர் கண்காணிப்பு

ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய நிபுணர் குழு நேற்று இரவு சென்னை வந்தது. தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

Update: 2021-12-27 02:13 GMT
சென்னை, 

உலகையே கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா, உருமாறி வீரியம் பெற்று டெல்டா வகையாக பரவத் தொடங்கி, தற்போது மீண்டும் உருமாறி ஒமைக்ரான் வைரசாக பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், கடந்த 2-ந்தேதி இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியது. முதலில் கர்நாடகாவில் தொடங்கி, தற்போது தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், டெல்லி என 17 மாநிலங்களில் பரவிவிட்டது.

அதிகபட்சமாக, மராட்டியத்தில் 141 பேரும், டெல்லியில் 79 பேரும், கேரளாவில் 57 பேரும், குஜராத்தில் 49 பேரும், தெலுங்கானா 44 பேரும், கர்நாடகாவில் 38 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் என மொத்தம் 17 மாநிலங்களில் 500 பேர் வரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஒமைக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட 34 பேரில், 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் ஒமைக்ரான் அறிகுறியுடன் உள்ள 42 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருக்கிறது.

இந்தநிலையில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக கூறினார்.

அதன்படி, ஒமைக்ரான் பாதிப்பில், முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களுக்கு இந்த மத்திய பன்னோக்கு குழு வர இருக்கிறது. அதில், 6-வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு நேற்று இரவு பன்னோக்கு குழு வந்தது. சென்னைக்கு விமானம் மூலம் வந்த இந்தக் குழுவில், மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த வல்லுநர்களான டாக்டர்கள் வினிதா, புர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய இருக்கின்றனர். தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்திலேயே தங்கியிருந்து, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான் தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இந்தக் குழுவினர், தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கும் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறை, வெண்டிலேட்டர் வசதி, மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர். பின்னர், ஆய்வின் முடிவுகளை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்