வாழ்க்கை பிரச்சினைக்கு புத்தகங்களில் பதில் உள்ளது

வாழ்க்கை பிரச்சினைகளுக்கு புத்தகங்களில் பதில் உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2021-12-26 18:40 GMT
வாழ்க்கை பிரச்சினைகளுக்கு புத்தகங்களில் பதில் உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நிறைவு விழா
புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில், 25-வது ஆண்டு தேசிய புத்தக கண்காட்சி கடந்த 17-ந்தேதி தொடங்கி வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
வெள்ளிவிழா புத்தக கண்காட்சிக்குழு தலைவர் முத்து வரவேற்றார். பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம் நோக்க உரையாற்றினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
நல்ல பாடத்தை கற்றுத்தரும்
நான் புத்தகம் படிப்பதில் நம்பிக்கை கொண்டவள். படிக்கும் பழக்கம் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுத்தரும். என்னை புதுப்பித்துக் கொண்டிருப்பது புத்தகங்கள் தான். நான் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நாள்தோறும் ஒருமணிநேரம் புத்தகம் படிப்பேன்.
தெலுங்கானாவின் கவர்னரான போது என்னை சந்திக்க வந்தவர்களிடம் பூங்கொத்து வேண்டாம், புத்தகம் கொடுங்கள் என்று கூறினேன். தற்போது 2 அலமாரிகள் நிறைய புத்தகங்கள் உள்ளன. வாழ்க்கை பிரச்சினைக்கு பதில் புத்தகங்களில் உள்ளது. வீடுகளில் 2, 3 படுக்கை அறைகள் இருக்கும் நிலையில் புத்தகம் படிப்பதற்கு என்று ஒரு அறை இருக்கவேண்டும்.
கிராமங்கள் தோறும் நூலகங்கள் இருக்க வேண்டும். தெலுங்கானாவில் ஒரு தன்னார்வ நிறுவனம் இதை செய்து வருகிறது. புதுவையிலும் எல்லா இடத்திலும் நூலகங்கள் வரவேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த புத்தக கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை கடைபிடித்து...
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து தடுப்பூசிதான் பாதுகாப்பு தரும். அதேநேரத்தில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது முக்கியம். புத்தாண்டு, பொங்கல் என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுங்கள். ஆனால் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடுங்கள்.
தடுப்பூசி போடுவதை எதிர்த்து சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். தடுப்பூசி போடாததால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் தடுப்பூசி போட சொல்கிறோம்.   அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
சிறப்பான சிந்தனை
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புத்தக கண்காட்சியில் நான் ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொண்டுள்ளேன். நல்ல புத்தகங்களை மாணவர்கள் படிக்கவேண்டும். அறிவை வளர்க்க தொழில்நுட்பம் உள்ளது. நல்ல புத்தகங்களை படித்தால்தான் சிந்தனை சிறப்பாக இருக்கும். பயணங்கள் செய்யும்போது, வாய்ப்பு கிடைக்கும் போது புத்தகங்களை படித்து அறிவை வளர்க்கவேண்டும்.
கொரோனா முடிந்துவிட்டது என்று நினைக்கவேண்டாம். இன்னும் வருகிறது என்கிறார்கள். கொரோனாவை தடுப்பூசியால் தான் வெல்ல முடியும். தடுப்பூசி போடுவதில் கவர்னர் ஆர்வம் காட்டி வருகிறார். நாள்தோறும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். தடுப்பூசிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
தடுப்பூசி போடாமல்...
நான்கூட முதலில் தடுப்பூசி போடாமல் இருந்தேன். தடுப்பூசி போட்டிருந்தால் ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கமாட்டேன். நான் ஆஸ்பத்திரிக்கு சென்றதே கிடையாது. ஒருமுறை மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 2, 3 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்துள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
விழாவில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் அண்ணாதுரை, வெள்ளிவிழா புத்தக கண்காட்சிக்குழு செயலாளர் கோதண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்