இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள்: எல்.முருகன்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
பிரதமர் நரேந்திரமோடியின் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை இணை மந்திரி எல். முருகன், சென்னையில் பொதுமக்களுடன் இணைந்து கேட்டு ரசித்தார். அதனைத்தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை அரசாங்கம் நமது மீனவர்களை கைது செய்யும் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. இது தொடர்பாக கூட்டுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடவேண்டிய இந்த குழு கொரோனா காரணமாக கூடவில்லை. விரைவில் இந்த குழு கூடி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதபடி நடவடிக்கை மேற்கொள்ளும்..
கூட்டுக்குழு மூலமாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் வருங்காலங்களில் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டதிட்டங்களின்படி மீனவர்களை விடுவித்து அவர்களை விரைவிலேயே தாயகம் திரும்ப செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.