தடுப்பூசி திட்டத்தில் அரசு மீண்டும் தடுமாறுகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
முன்கள பணியாளர்களை போன்று பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ‘பூஸ்டர்' தடுப்பூசியை அனுமதிக்காதது 3-வது தவறு.
சென்னை,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி திட்டத்தில் அரசு மீண்டும் தடுமாறி வருவதாக தெரிகிறது. தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோசுக்கான இடைவெளி 12 முதல் 16 வாரம் என்று பரிந்துரைப்பதற்கான முடிவு தவறானது. சப்ளை பற்றாக்குறையாக இருந்ததால், வெளிப்படையாக எடுக்கப்பட்ட முடிவு இது. லட்சக்கணக்கான டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கிடந்தபிறகும், அந்த முடிவு இன்றும் நடைமுறையில் உள்ளது. முந்தைய முடிவை தக்க வைத்துக்கொள்ளும் முடிவு, இரட்டிப்பான தவறானது.
இரண்டாவது டோஸ் (தற்போது 50 சதவீதம்) போட்டுக்கொண்ட வயது வந்தோரின் சதவீதத்தை அதிகரிப்பதற்கு, அரசிடம் நிலவும் இயலாமை மற்றொரு கடுமையான தோல்வியாகும். முன்கள பணியாளர்களை போன்று பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ‘பூஸ்டர்' தடுப்பூசியை அனுமதிக்காதது 3-வது தவறு. இந்த மூன்று பெரும் தோல்விகளும் சேர்ந்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.