திருக்காஞ்சியில் மகாநதி திருவிழா கோலாகலம் கவர்னர் முதல் அமைச்சர் பங்கேற்பு
திருக்காஞ்சியில் நேற்று மகாநதி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வில்லியனூர்
திருக்காஞ்சியில் இன்று மகாநதி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நதி திருவிழா
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. காசிக்கு இணையான இந்த கோவிலில் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக 2023-ம் ஆண்டு வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த வழிபாடு மாலை 6.30 மணியில் இருந்து 7 மணி வரை நடைபெறும்.
கவர்னர், முதல்-அமைச்சர்
இந்தநிலையில் 12-வது வாரமான இன்று மாலை நடந்த கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் தலைமை அர்ச்சகர் சரவணாச்சாரியார் கங்கை நதிபோல் சங்கராபரணி நதிக்கு மலர் தூவி தீபாராதனை செய்து வழிபாடு செய்தார். இந்த ஆரத்தி விழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அகல் ஏற்றி சங்கராபரணி ஆற்றில் வாழைமட்டையில் மிதக்க விட்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.ரமேஷ், கல்யாணசுந்தரம், ஜான்குமார், தலைமை செயலர் அஸ்வினிகுமார், செயலாளர் விக்ரமராஜா, இந்து அறநிலையதுறை ஆணையர் சிவசங்கரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள்
காசியில் நடைபெறும் ஆரத்தியை புதுவை மக்கள் காண அரிய வாய்ப்பாக, இந்த கங்கா ஆரத்தி நடைபெற்று வருகிறது. மேலும் புதுவையில் நடைபெறும் மகா புஷ்கரணி விழா எந்த தடையும் இன்றி நடைபெறுவதற்காகவும், மக்கள் வந்து புனித நீராடி செல்ல சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் வருவதற்காகவும், விவசாயம் செழித்து வளரவும், இந்த கங்கா ஆரத்தி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் தெருக்கூத்து, கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.