ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள்: தமிழகம் வருகிறது மத்திய குழு..!
வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வுள்ள 10 மாநிலங்களுக்கு மத்தியக்குழு விரைகிறது.
புதுடெல்லி,
உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. கர்நாடகத்தில் முதலில் 2 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த 23 நாட்களில் நாட்டின் 17 மாநிலங்களுக்கு பரவி வேகம் காட்டி உள்ளது. இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வுள்ள 10 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்ட குழு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மராட்டியம், தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மிசோரம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக்குழு விரைகிறது. மாநிலத்தில் நிலவும் ஒமைக்ரான் பரவல் தன்மை குறித்து ஆய்வு நடத்தி, எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்த குழுவினர் ஆலோசனை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.