புதுவை நகர கூட்டுறவு வங்கியில் கையாடல் செய்த 410 பவுன் நகைகள் மீட்பு

புதுவை நகர கூட்டுறவு வங்கியில் கையாடல் செய்த 410 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக கைதான காசாளர்கள் போலீசில் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர்.

Update: 2021-12-24 16:42 GMT
புதுச்சேரி
புதுவை நகர கூட்டுறவு வங்கியில் கையாடல் செய்த 410 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக கைதான காசாளர்கள் போலீசில் பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர்.

3 கிலோ நகைகள்

புதுவை லாஸ்பேட்டையில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் பல்வேறு தேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்ப வருபவர்களிடம் நகைகளை திருப்பித் தராமல் ஊழியர்கள் இழுத்தடித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்து விசாரித்ததில் நகை மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகள் அங்கு வந்து வாடிக்கையாளர்களின் நகைகளை ஆய்வு செய்தனர். சுமார் 700-க்கும் மேற்பட்ட பைகளில் வைத்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக சரி பார்த்தனர். இதில் 80 பைகளில் இருந்த நகைகள் கவரிங் என்பது தெரியவந்தது. 
இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்ததில், வாடிக்கையாளர்களின் ஒரிஜினல் நகைகளை எடுத்துக்கொண்டு கவரிங் நகைகளை வைத்து 410 பவுன் வரை (3 கிலோ 200 கிராம்) ரூ.1 கோடியே 19 லட்சம் வரை கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது. 

காசாளர்கள் கைது

இதுகுறித்து கூட்டுறவு வங்கியின் பரிசோதனை பிரிவு மேலாளர் அன்பழகன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.
இந்த மோசடியில் தொடர்புடைய வங்கியின் தலைமை காசாளர் சுதானா நகரை சேர்ந்த கணேசன் (வயது 56), உதவி காசாளர் விஜயகுமார் (42) ஆகியோரரை கைது செய்தனர்.
இவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நகைகளை மோசடி செய்தது எப்படி என்பது குறித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு

அதாவது, வங்கியில் மோசடியாக நகைகளை எடுத்து வந்து வெளியில் உள்ள அடகு கடைகளில் அதிக தொகைக்கு மறு அடமானம் வைத்து கணேசனும், விஜயகுமாரும் பணம் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்தும் சுயலாபத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் கடன் தொகையை செலுத்தி விட்டு தங்களது நகைகளை கேட்டால் 2 மணி நேரம் கழித்து வருமாறும் 2 நாட்கள் கழித்து வருமாறும் அனுப்பி வந்துள்ளனர். சர்வர் வேலை செய்யவில்லை என்று திருப்பி அனுப்பியும் வாடிக்கையாளர்கள் அலைக்கழித்துள்ளனர்.
அதற்குள் வேறொரு வாடிக்கையாளரின் நகையை வங்கியில் இருந்து எடுத்து அடகு வைத்து அந்த பணத்தை வைத்து சம்பந்தப்பட்டவரின் நகையை மீட்டு கொடுத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாகவே இந்த மோசடி பரிமாற்றத்தில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நகைகள் மீட்பு

இதுதொடர்பாக எந்த புகாரும் வராத நிலையில் வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவில்லை. இந்தநிலையில் ஒரு வாடிக்கையாளர் அவசரமாக நகைகளை உடனே கேட்டு அடம்பிடித்ததால் நகை மோசடி அம்பலத்துக்கு வந்தது.  
இந்த நூதன மோசடியில் வங்கி தலைமை காசாளர் கணேசன், உதவி காசாளர் விஜயகுமார் ஆகியோருக்கு மட்டுமே தொடர்பா? அல்லது வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து கோரிமேடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
கைதான கணேசன், விஜயகுமார் ஆகியோர் தெரிவித்த தகவலின்பேரில் வெளியே பல்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்டு இருந்த நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் 410 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
இந்த மோசடி பற்றி தெரியவந்ததும் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வைத்து இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது அடமான நகைகளை வங்கியில் இருந்து மீட்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நகைகளை திருடிய காசாளர்

மகள் திருமணத்தால் கடனாகி நகைகளை திருடிய காசாளர்
நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகள் மோசடி செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் கூறியதாவது:-
வங்கியில் நகை வைத்திருக்கும் லாக்கர் சாவி மேலாளர் கோபிநாத் வசம் இருக்கும். அவர் விடுமுறையில் செல்லும்போது உதவி மேலாளர் பிரதீபா வைத்திருப்பார். 
தலைமை காசாளர் கணேசன், உதவி காசாளர் விஜயகுமார் ஆகியோரிடம் வாடிக்கையாளர்கள் திருப்பும் நகையை எடுத்து வருமாறு நம்பிக்கையின் அடிப்படையில் சாவியை பிரதீபா கொடுத்துள்ளார்.
இதை அவர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி லாக்கரில் இருந்து நகைகளை அவ்வப்போது எடுத்து வெளியில் அடகு வைத்துள்ளனர். அப்போது வங்கியில் அடகு வைக்கப்பட்ட எண்ணை எழுதி வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் கேட்கும்போது அந்த நகைகளை ஓரிரு நாளில் திருப்பி கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் தான் இந்த மோசடி விவகாரம் அம்பலமானது. தலைமை காசாளர் கணேசன் தனது மகளின் திருமணத்துக்கு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் உதவி காசாளர் விஜயகுமாருடன் சேர்ந்து வங்கியில் இருந்து நகைகளை திருடி மோசடியில் ஈடுபட்டு இருவரும் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்