மதுப்பிரியர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து ‘பாக்கெட்’ சாராயம் விற்றவர் கைது

மதுப்பிரியர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து பாக்கெட் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 105 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-24 06:26 GMT
தலைவாசல், 

உணவு வகைகள், மளிகை பொருட்களை ஆர்டர் எடுத்து டோர் டெலிவரி செய்வதை பார்த்திருப்போம். ஆனால் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இதற்கு ஒருபடி மேலே சென்று விட்டார் 66 வயதான முதியவர் மனோகரன். வசந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் பாக்கெட் சாராயம் விற்பனையை ஆற்றோரம், சுடுகாடு, ஓடைகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் செய்து வந்தார். 

இந்த நிலையில் தனது விற்பனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயன்ற அவர், மதுப்பிரியர்களிடம் செல்போன் எண்ணை கொடுத்து அதில் அழைத்தால் ஒரு குறிப்பிட்ட ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து செல்போனில் ஆர்டர் எடுத்து பாக்கெட் சாராயத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று விற்று வந்துள்ளார். 

இந்த நிலையில் அவர் போலீசாரிடம் கையும், களவுமாக நேற்று சிக்கி உள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 105 லிட்டர் பாக்கெட் சாராயம் மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதேபோல் தலைவாசல் அருகே கோவிந்தம்பாளையம் ஆற்றங்கரையில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா கூகையூர் கிராமத்தை சேர்ந்த சித்ரா (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்