தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது

தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

Update: 2021-12-23 19:14 GMT
சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1, 2, 2ஏ, 4 உள்பட பல்வேறு அரசு பணியிடங்களுக்கு தேர்வை நடத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது புதிய மாற்றங்களுடன் தேர்வை நடத்த திட்டமிட்டு, அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதில், தமிழ் மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்படும் என்றும், அதில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அதற்கு அடுத்த பிரிவு தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த அறிவிப்பின்படி, தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகிய விவரங்கள் அடங்கிய முழு தகவல்களை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே அறிவித்த கால அட்டவணையின் படி குரூப்-2 மற்றும் குரூப்-4 பணிக்கான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. அந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக தற்போது டி.என்.பி.எஸ்.சி. தமிழ்மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்