மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரண தொகை
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் தின விழா
புதுச்சேரி அரசு சமூகநலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று தர்மாபுரியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி வரவேற்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் மாநில விருதுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகையை 15 பேருக்கு வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
மக்கள் நலத்திட்டங்கள்
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். இதுதவிர புதிதாக 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை வினியோகம் செய்யப்படுகிறது.
நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை மறுபடியும் நடத்த முடியுமா? சம்பளம் கொடுக்க முடியுமா? என்று சிலர் கேள்வி எழுப்பினர். நலிந்த பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. மழை நிவாரணம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பயிர் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அறிவித்தபடி நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.
சாலைகள் சீரமைக்கப்படும்
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சாலைகள் எதுவும் சீரமைக்கப்படவில்லை. இதனால் புதுவையில் பெய்த மழையால் தற்போது சாலைகள் அதிகமாக சேதமடைந்துள்ளன. உள்ளாட்சி துறை மூலமாக சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். அதற்கான நிதியை தற்போது ஒதுக்கியுள்ளோம்.
சென்டாக் மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கான நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பூமியான்பேட்டை லாம்போர்ட் சரவணன் நகரில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள 450 வீடுகள், வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு
கிராமங்களில் மனமகிழ்ச்சி மன்றம், உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களை நிரப்பும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடனுக்கான அவர்களின் உதவித்தொகையை பிடித்தம் செய்யக் கூடாது என்று வங்கி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் அறிவுறுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வது குறித்தும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.