ரவுடி பாம் ரவி கொலையில் பா.ஜ.க. பிரமுகர் கைது

ரவுடி பாம் ரவி உள்பட 2 பேர் கொலையில் மூளையாக செயல்பட்ட பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-23 18:06 GMT
ரவுடி பாம் ரவி உள்பட 2 பேர் கொலையில் மூளையாக செயல்பட்ட பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பிரபல ரவுடி
புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (வயது 33). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன. ஜாமீனில் வெளியே இருந்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் வாணரப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்து வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் அவருடன் வந்த அந்தோணியும் கொலையுண்டார்.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் இருந்து வரும் ரவுடிகளான வினோத், தீனா ஆகியோர் வகுத்து கொடுத்த சதி திட்டத்தின்படி பாம் ரவி கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
மூளையாக செயல்பட்டவர்
இதையடுத்து இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள், நேரடி தொடர்புடையவர்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டனர். பிரவீன், அருண் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். 
தொடர்ந்து கோர்ட்டு அனுமதி பெற்று சிறையில் இருந்த வினோத், தீனா ஆகியோரை வெளியே எடுத்து போலீசார் காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது சிறையில் அவர்கள் ரகசியமாக பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை ஆய்வு செய்ததில், வாணரப்பேட்டையை சேர்ந்த விக்கி என்ற ஷார்ப் விக்கி என்பவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. இதை வைத்து வினோத், தீனாவிடம் விசாரித்ததில், தாங்கள் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி வெளியில் இருந்து மூளையாக செயல்பட்டு பாம் ரவி கொலையை கச்சிதமாக முடித்துக் கொடுத்ததாக தெரிவித்தனர்.
யார் பெரியவர் என்பதில் போட்டி
இதைத்தொடர்ந்து விக்கியை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் ஆவார். வாணரப்பேட்டையில் ரவுடிகளான பாம் ரவி, மர்டர் மணிகண்டன் ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்ததுடன் யார் பெரியவர்? என்பதில் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் போட்டியிட பாம் ரவி விரும்பினார். ஏற்கனவே மோதல் இருந்து வந்தநிலையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் பாம் ரவி முக்கிய புள்ளியாகி விடுவார் என்று கருதிய மர்டர் மணிகண்டன் கோஷ்டியை சேர்ந்த வினோத், தீனா, விக்கி மற்றும் பலர் சேர்ந்து பாம் ரவியை கொலை செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
2 மாதங்களுக்கு முன் நடந்த பாம் ரவி கொலையில் பா.ஜ.க. பிரமுகர் தற்போது கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்