ஒமைக்ரான் தடுப்பு - தலைமைச்செயலாளர் பகல் 12 மணி அளவில் ஆலோசனை
ஒமைக்ரான் பரவலை தடுப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு பகல் 12 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை,
தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று பரவத்தொடங்கியதுமே ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா உறுதியானால் ஒமைக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இருப்பினும் இந்தியாவில் கடந்த 2-ந் தேதி இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு இன்று பகல் 12 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.