நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை குடில், ஸ்டார், மரம் விற்பனை ஜோர்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, கிறிஸ்துமஸ் மரம், குடில், ஸ்டார் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

Update: 2021-12-22 23:13 GMT
சென்னை,

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம் இழந்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோய்ப் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கிவிட்டது. கீத பவனி, கிறிஸ்துமஸ் மரவிழா என தேவாலயங்களில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

குடில், ஸ்டார் விற்பனை ஜோர்

கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருடைய நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மரம், இயேசு பிறப்பு குறித்த குடில், ஸ்டார் மற்றும் ஒளிரும் விளக்குகள்தான். அதன்படி, கிறிஸ்தவர்கள் வீட்டில் ஸ்டார் மற்றும் ஒளிரும் விளக்குகளை தொங்கவிட்டு, குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து வருகின்றனர்.

இதற்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக அலங்கார பொருட்கள் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை சற்று அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதுதவிர புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.

தேவாலயங்களில் ஆராதனை

நாளை மறுநாள் (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்தே தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும். பெரும்பாலான தேவாலயங்களில் நாளை மறுதினம் அதிகாலையில் ஆராதனை இருக்கும்.

கடந்த ஆண்டு நோய்ப்பாதிப்பு இருந்ததால், கடும் கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்களில் ஆராதனை நடந்தது. இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆராதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்