சென்னை ஓட்டேரியில் பயங்கரம் - மனைவியை கொன்று வீட்டுக்குள் மறைத்து வைத்த கணவன்

மனைவியை கொன்று வீட்டின் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு கணவன் தலைமறைவாகிவிட்டார். அடியில் தாய் உடல் இருப்பது தெரியாமல் அவரது மகன்கள் கட்டிலில் படுத்து தூங்கினர்.

Update: 2021-12-22 18:54 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வாணி (41). இவர், வால்டாக்ஸ் சாலையில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கவுதம் (15), ஹரிஷ் (12) என 2 மகன்கள் உள்ளனர். அங்குள்ள பள்ளியில் கவுதம் 10-ம் வகுப்பும், ஹரிஷ் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

ரமேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது மனைவி வாணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவன்-மனைவி தகராறு

கடந்த 20-ந்தேதி இரவு மகன்கள் இருவரும் அருகில் உள்ள தங்கள் பாட்டி வீ்ட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த கணவன்-மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு இரவு 11 மணியளவில் ரமேஷ், தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு வந்த மூத்த மகன் கவுதம், “தாய் எங்கே?” என தந்தையிடம் கேட்டான். அதற்கு ரமேஷ், “உனது தாய், வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டாள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். பெற்றோர் இடையே அடிக்கடி இதுபோல் தகராறு ஏற்பட்டு வந்ததால் அதனை கவுதம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

தாய் வெளியே சென்று இருப்பதாக நினைத்துக்கொண்டு நேற்று முன்தினம் முழுவதும் கவுதம், ஹரிஷ் இருவரும் தங்கள் பாட்டி வீட்டுக்கு சென்று சாப்பிட்டனர். நேற்று முன்தினம் இரவு கவுதம், ஹரிஷ் மற்றும் கவுதமின் நண்பர் என 3 பேரும் அவர்களது வீட்டு கட்டிலில் படுத்து தூங்கினர்.

கட்டிலுக்கு அடியில் உடல்

நேற்று காலை ஹரிஷ், அந்த கட்டிலுக்கு அடியில் இருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்தார். கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, அங்கு அழுக்கு துணிகளுக்கு நடுவே ரத்தம் வடிந்தநிலையில் இருப்பதை கண்டார். துணிகளை எடுத்து பார்த்தபோது அங்கு தனது தாயார் வாணி, தலையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அடித்துக்கொலை

வாணியின் தலையில் மட்டும் ரத்த காயம் உள்ளது. உடலில் மற்ற இடங்களில் காயங்கள் இல்லை. எனவே கடந்த 20-ந்தேதி இரவு ரமேஷ் தனது மனைவி வாணியுடன் தகராறு செய்து உள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், மனைவியின் தலையில் அடித்துக்கொலை செய்துவிட்டு, உடலை, வீட்டின் உள்ளே உள்ள கட்டிலுக்கு அடியில் தள்ளி மறைத்து வைத்துவிட்டு, உடலை சுற்றிலும் அழுக்கு துணிகளை போட்டு விட்டு தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

மனைவியை கொன்றுவிட்டு அவர் தப்பிச்செல்லும்போதுதான் தாய் எங்கே? என கேட்ட மகன் கவுதமிடம், உனது தாய் வேறு ஒருவடன் சென்றுவிட்டதாக கூறிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தலைமறைவான ரமேசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்