கிறிஸ்துமஸ், புத்தாண்டு: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கங்கள் கடிதம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த முறை அரையாண்டுத் தேர்வு நடைபெறவில்லை. வழக்கமாக, அரையாண்டுத் தேர்வு முடிந்த கையோடு, மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி, விடுமுறை அளிக்கப்படும். இந்த முறை தேர்வு நடைபெறாததால், விடுமுறை எப்போது விடப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.
வரும் 25 ஆம் தேதி முதல், ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை என மொத்தம் 9 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் பண்டிகை காலங்களில் ஆசிரியர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரையாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என
ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.
பண்டிகை கால விடுமுறை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.