குமரி-கேரள எல்லையில்: அரசு பஸ்சில் ரூ.70 லட்சம் பறிமுதல் சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்

குமரி-கேரள எல்லையில் சோதனையின்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்தவர் சிக்கினார்.

Update: 2021-12-20 23:03 GMT
கன்னியாகுமரி,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க குமரி-கேரள எல்லையில் உள்ள சோதனைசாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு வாகன சோதனையும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், கேரளாவில்எஸ்.டி.பி.ஐ., பா.ஜனதா நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் எல்லைகளில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் படந்தாலுமூடு சோதனைசாவடியில் இருமாநில போலீசாரும் இணைந்து நேற்று காலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள அரசு பஸ்சில் சோதனை நடத்தப்பட்டது.

பஸ்சில் ரூ.70 லட்சம் சிக்கியது

இந்த சோதனையின்போது அந்த பஸ்சில் ஒருவர் சூட்கேஸ் பெட்டியுடன் சந்தேகப்படும்படியாக உட்கார்ந்திருந்தார். உடனே போலீசார் அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது கட்டு, கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.70 லட்சம் சிக்கியது.

உடனே போலீசார் பணத்தை கொண்டு வந்தவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி தீவிர விசாரணை நடத்தினர். இதில் பணத்துடன் பிடிபட்டவர் சென்னை புதுப்பேட்டை லெப்பை தெருவை சேர்ந்த ஆதாம் (வயது 45) என்பதும், மேலும் பணத்தை கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரிய வந்தது.

ஹவாலா பணமா?

மேலும், அந்த பணம் யாருடையது? எதற்காக எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பதை கண்டறிய விசாரணை நடத்தினர். அப்போது ஆதாம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் பஸ்சில் சிக்கிய பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் பிடிபட்ட ஆதாமை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர். அவர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

மேலும் செய்திகள்