வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-20 16:33 GMT
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் பணி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக வீடு, வீடாகவும், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி காந்திவீதியில் வீடு, வீடாகவும், வணிக நிறுவனங்களிலும் தடுப்பூசி போடும் பணியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். 
அப்போது கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆவணங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள், 2-வது தவணை தடுப்பூசியை குறித்த காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் முதல் தவணை தடுப்பூசியை 8 லட்சத்து 14 ஆயிரம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 30 ஆயிரத்து 448 பேரும் போட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்னும் 1½ லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. 
ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே கொரோனா விதிகளை பின்பற்றி கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள்  அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கேட்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றினால் அரசு தடைவிதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்