மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜனவரி 7 வரை அவகாசம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6,958 எம்.பி.பி.எஸ். இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு 1,925 இடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-19 17:13 GMT
சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6,958 எம்.பி.பி.எஸ். இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1,925 இடங்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த இடங்களுக்கு மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

அதன்படி, மொத்தம் 8 ஆயிரத்து 883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குநரகம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் பதிவு செய்துவருகின்றனர்.

மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் ஜனவரி 7-ம் தேதி (மாலை 5 மணி) வரை விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பிக்க ஜனவரி 10-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு கலந்தாய்வு தேதியை மத்திய அரசு வெளியிட்ட பிறகு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்