பெண் தொழிலாளர்கள் 16 மணி நேரம் போராட்டம்: அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - போராட்டம் வாபஸ்

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் தனியார் விடுதியில் தரமற்ற உணவு விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Update: 2021-12-18 11:47 GMT
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள் உள்ளன. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்த பகுதியில் அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அங்கு உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவது உண்டு. இதற்காக ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை அந்த தொழிற்சாலைகள் மாதம் தோறும் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளும்., இந்த நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூந்தமல்லியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிவது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு விடுதியில் தங்கி பணியாற்றி வரும் பெண்கள் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15-ம் தேதி  மதியம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கத்தால் சிலர் அவதியுற்றனர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவர்களை பூந்தமல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைளிலும், திருவள்ளூர், நேமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்தனர்.

பூந்தமல்லியில் மட்டும் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சினை இருந்ததா அல்லது தரம் இல்லாத உணவு சாப்பிட்டதால் இதுபோன்ற வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.

தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி மயக்கத்தால் அவதியுற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து வருவாய்த்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் உணவு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா அல்லது தண்ணீரால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா என்பதை உறுதி செய்ய சோதனைக்காக தண்ணீர் மற்றும் உணவை எடுத்துச்சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டதும், இதற்கு முன்னரும் பெண்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அதனை விடுதி நிர்வாகம் மறைத்து இருப்பதும் தெரிய வந்தது. அதிகமான பெண்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க இடம் கிடைக்காமல் அரசு மருத்துவமனையிலும் சேர்த்ததின் காரணமாகவே இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளதாக அங்கு பணிபுரியும் பெண்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவால் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில். பெரும்பாலானோர் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில் இருந்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக உணவு அளிக்க வேண்டும் என்பது குறித்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களைப் பற்றி நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது மழுப்பலான பதில்களை நிர்வாகம் அளித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் குதித்தனர். 

இதனையடுத்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் வெளியில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால்  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சுமார் 16மணி நேரத்திற்கும் போராட்டம் நடைபெற்றதால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்மித்தது.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்களிடம் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அவர்களின் கோரிக்கை அரசு ஏற்றுகொள்ளவதாகவும் உறுதி அளித்தனர்.  இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தியதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.  16 மணி நேரமாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

முன்னதாக போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்களிடம் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் செய்திகள்