மதுரை: பள்ளிகளில் ஆய்வு செய்ய 17 குழுக்கள் - மாவட்ட கலெக்டர் தகவல்
மதுரை மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளில் 200 பள்ளி கட்டிடங்களை இடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,
நெல்லையில் பள்ளிக் கழிப்பறைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே அந்த பள்ளி தாளாளர், தலைமையாசிரியை, கட்டட ஒப்பந்தகாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் கல்விதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் 200 பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு அதனை இடிக்க மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவிட்டார். மேலும் முதற்கட்ட நடவடிக்கையாக சேதமடைந்த கட்டிடங்களின் அருகே மாணவர்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுத் தடை விதிக்கப்பட்டது. இன்னும் 5 நாட்களுக்கு சேதமடைந்த கட்டிடங்களை இடித்து மாற்று ஏற்பாடுகள் செய்யவுள்ளதாகவும், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கட்டிட சேதம் குறித்து தகவல் வந்தால் கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அங்கன்வாடிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.